பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 29, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 6



2000-ஆம் ஆண்டின்பொழுது, யூஜின் நோயினால் பாதிப்படைந்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன. யூஜினுடைய வாழ்வும், கால ஓட்டத்தில் ஒரு சமனிலையை அடைந்தது. அவர் பிடித்ததை சாப்பிடுவார். சிலசமயங்களில் ஒரு நாளுக்கு ஐந்து, ஆறு தடவைகள் சாப்பிடுவார். தினசரி காலையில் திறந்த வெளியில் நடைப்பயிற்சி செய்வார். தொலைக்காட்சியில் வரலாற்று சேனலில் எந்த நிகழ்ச்சி இருந்தாலும் பார்ப்பார். நிகழ்ச்சி மறுஒலிபரப்பு என்பதும் அவருக்குத் தெரியாது. அவரால் கண்டுபிடிக்க இயலாது.
வயது ஏறஏற, யூஜினுக்கு நோயின் விளைவாக ஏற்பட்ட பழக்கங்களால் பிரச்சனைகள் உதிக்க ஆரம்பித்தது. 


இருந்த இடத்தில் அசையாமல் மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்ப்பார். அவருக்கு நிகழ்ச்சிகள் சலிப்பதே கிடையாது. மருத்துவர்கள் யூஜினுடைய இதயம் பலவீனமாகிவிடும் என்று பயந்தனர். யுஜினுடைய மனைவி, யூஜினுக்கு நல்ல சத்துள்ள உணவுகளையே தர விரும்பி, பழ வகைகளை அதிகமாக ஃபிரிஜ்ஜில் வைத்திருப்பார். ஆனால் யூஜின் எப்பொழுதும் பன்றி மாமிசம் மற்றும் முட்டைகளையே ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து சாப்பிடுவார். அவருக்கு அதுபோன்ற பழக்கங்களே வளர்ந்திருந்தது. முதுமையடைந்ததால், யூஜினுடைய எலும்புகளும் வலுவிழந்தன. ஆனால் யூஜினைப்பொறுத்தவரை, அவருடைய வயதை உண்மையான வயதைவிட இருபது வருடங்கள் குறைவாகவே நினைத்து வந்தார். அதனால் அந்த வயதுக்குரிய வேகத்திலேயே அவருடைய நடைமுறைகளும் இருந்தன.


“நான் என் வாழ்க்கை முழுவதும், மூளையின் ஞாபகசக்தியை ஒரு அதிசயமாகவே பார்த்துவந்திருக்கிறேன். யூஜினைக் கண்டவுடன், முற்றிலும் அனைத்து விஷயங்களையும் மறந்துவிட்டாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவதில்லை என்று புரிந்துகொண்டேன். மூளை அனைத்தையும் மறந்துவிட்டாலும், மகிழ்ச்சியை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ளக்கூடிய திறமையைப் பெற்றிருக்கிறது. சில சமயங்களில் அதுவே யூஜினுக்குப் பிரச்சனையாகவும் அமைந்துவிடுகிறது” என்று ஸ்கொயர் கூறுகிறார்.
பழக்கங்களைப்பற்றி புரிந்துகொண்ட யூஜினின் மனைவி பெவர்லி, யூஜினுக்கு உதவும் வகையில், சில மாற்றங்களை ஏற்படுத்தி நல்ல பழக்கங்களை அவரிடம் கொண்டுவர முயற்சி செய்தார். ஃபிரிஜ்ஜில் பன்றி மாமிசம் மற்றும் முட்டை வைக்கும் அளவினை மட்டுப்படுத்தினார். யூஜினுக்கு அருகில் காய், கனிகளை வைத்தார். அதை யூஜின் சாப்பிட ஆரம்பித்த்தும் சமையலறைக்கு செல்லும் பழக்கத்தைக் கைவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக யூஜினுக்கு உணவுப் பழக்கத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இருப்பினும் வயதான காரணத்தினால் ஒருமுறை யூஜினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நிலை ஏற்பட்ட்து. அங்கு அவருடைய உடம்பில் இணைக்கப்பட்ட குழாய்களை, ஒவ்வொருமுறை விழித்தெழும்பொழுதும், யூஜின் பிடுங்கி எறிய முற்பட்டார். எத்தனை முறை எடுத்து சொன்னாலும் அவருக்கு அது நினைவில் நிற்கவில்லை. அடுத்தமுறை எடுத்துவிட்டால் அவரைக் கட்டிப்போட்டுவிடுவோம் என்று மிரட்டியும் பலனில்லை. அடுத்தமுறையும் அவர் அதை சுத்தமாக மறந்திருப்பார்.


கடைசியில், அவருடைய மகள், யூஜினிடம் அவர் பெரிய அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவுவதாகவும் அதற்கு அந்தக் குழாய்கள் அவர் உடம்பில் இருப்பது அவசியம் என்றும் கூறி அவரை நம்ப வைத்தார். தாதிகளும் சிறிது நேரத்துக்கு ஒருமுறை அவரிடம், அவர் மிகப்பெரிய உதவி செய்வதாகக் கூறி அவரை நம்ப வைத்தனர். அதனை அவர் மிகவும் பெருமையாக நினைத்தார். அதன் பிறகு அவர் அந்தக் குழாய்களை பிடுங்குவதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். சில வாரங்கள் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்றபின் அவர் வீடு திரும்பினார்.


பிறகு 2008-ல் யூஜின் வீட்டில் கீழே விழுந்ததில் அவருடைய இடுப்பெலும்பு முறிந்துவிட்டது. இந்த முறையும் அவரை மருத்துவமனையில் சேர்த்து நீண்ட நாட்கள் தங்கவேண்டிய சூழலாக அமைந்துவிட்டது. மருத்துவர்களும் தாதிகளும், யூஜினுக்கு ஒவ்வொரு முறை விழிப்பு வந்ததும் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்று நினைவுபடுத்தவேண்டிய பிரச்சனை இருந்தது. யூஜின் குடும்பத்தினர் யூஜினைச் சுற்றி அவருடைய குடும்பப் புகைப்படங்கள், அவர் ஏன் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதற்காக எழுதப்பட்ட விளக்கங்கள் போன்றவற்றை அவரைச் சுற்றி வைத்தனர். ஒவ்வொரு நாளும் அவரது மனைவியும் மற்ற குடும்பத்தினரும் அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்துக்கொண்டனர்.


ஆனால் இந்த முறை யூஜின் அவ்வளவு கவலைப்பட்டத்தாகத் தெரியவில்லை. ஏன் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று அவர் கேட்கவில்லை. ஏதோ ஒரு வகையில் அவர் அமைதியாக இருந்ததாக டாக்டர் ஸ்கொயர் குறிப்பிடுகிறார். “கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக அவருக்கு மறதி நோய் உள்ளது. அவரது மூளை தான் ஏதோ பிரச்சனையில் இப்படித்தான் இருக்கிறோம் என்று ஒத்துக்கொண்டுவிட்டதுபோல் தோன்றியது.” என்கிறார் டாக்டர் ஸ்கொயர்.


யூஜினுடைய மனைவி பெவர்லியும் நாள் தவறாமல் மருத்துவமனைக்கு வந்தார். “நான் மருத்துவமனையில் யூஜினிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பேன். அவரை மிகவும் நேசிப்பதாகக் கூறுவேன். எங்களது கடந்த காலம் மிகவும் இனிமையாக இருந்ததாக அவருக்கு நினைவுபடுத்துவேன். பழைய புகைப்படங்களைக்காட்டி அவர் எந்த அளவுக்கு நேசிக்கப்படுகிறார் என்று அவருக்கு நினைவுபடுத்துவேன். எங்களுக்கு மணமாகி கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன. அதில் முப்பத்தைந்து வருடங்கள் இயல்பான தம்பதிகளாகத்தான் இருந்தோம். இப்பொழுது சில நேரங்களில் கடினமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? எனக்கு என்னுடைய பழைய கணவர் திரும்பவும் வேண்டும். இருந்தாலும் எப்படியோ அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதுதான் சற்று நிம்மதி தரும் விஷயம்.”


சில வாரங்களுக்குப் பிறகு ஒருமுறை யூஜினுடைய மகள் யூஜினை சந்திக்க வந்தாள். யூஜின் அவளிடம் “ இன்று என்ன் ப்ரொகிராம்?” என்று வினவினார். அவரது மகள் அவரை சக்கர நாற்காலியில் அவரை மருத்துவமனைக்கு வெளியே புல்தரைக்கு அழைத்து சென்றார். “இன்று மிகவும் அருமையான க்ளைமேட்டாக உள்ளது. அதிக வெப்பமுமில்லை. அதிக குளிருமில்லை.” என்றார். அவரது மகளும் அதனை ஆமோதித்தார். அவள் தனது குழந்தைகளுடன் எப்படி பொழுதைப் போக்குவாள் என்று விவரித்தாள். தந்தை சீக்கிரம் குணமாகி வீடு திரும்பிவிடுவார் என்று அவள் நினைத்தாள். சூரியன் மறைய ஆரம்பித்ததும் அவள் தந்தையை அவரது அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டாள்.
அப்பொழுது யூஜின் மகளை நோக்கி “ உன்னைப்போன்ற மகளைப் பெறுவதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.” என்று திடீரென்று கூறினார். அப்படி அவர் கடைசியாக எப்பொழுது கூறினார் என்று அவரது மகளுக்கு நினைவில் இல்லை. “நானும் தங்களைத் தந்தையாகப்பெற பாக்கியம் செய்திருக்கவேண்டும்” என்று பதிலளித்தாள்.“ “இன்று மிகவும் அருமையான க்ளைமேட்டாக உள்ளது. அதிக வெப்பமுமில்லை. அதிக குளிருமில்லை. நீ என்ன நினைக்கிறாய்?.” யூஜின் மகளிடம் மீண்டும் கேட்டார்.


அன்று இரவு சுமார் ஒரு மணி அளவில் பெவர்லிக்கு மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது. யூஜினுக்கு பெரிய மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அவரைக் காப்பாற்ற முடியாமல் அவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. யூஜின் போய்விட்டார். இப்பொழுது, மருத்துவமனையில் ஸ்கேன் செய்த அவரது படங்கள் பலப்பல மருத்துவ பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.


“யூஜின் மருத்துவத்துறையில் உதவ முடிந்ததற்காக மிகவும் பெருமைப்பட்டிருப்பார். எங்களுக்கு மணமான புதிதில், ஏதாவது நல்ல காரியம் செய்யாமல் இந்த உலகைவிட்டு போகக்கூடாது என்று அவர் கூறுவார். உண்மையில் அவர் செய்துவிட்டுத்தான் போயிருக்கிறார். ஆனால் அவருக்குத்தான் அவர் செய்தது எதுவும், அவர் நினைவில் இல்லை.” பெவர்லி வருத்தத்துடன் டாக்டர் ஸ்கொயரிடம் கூறினார்.



-தொடரும்.





சில உண்மைகள்:



இந்த உண்மைகள் அனைத்தும் இந்திய மனப்பாங்குக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மைகள்தான் என்று நினைக்கிறேன்.


http://www.viralnova.com/regret-when-older/


விடாமுயற்சி என்பது இதுதானோ? 











Thursday, May 22, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 5



யூஜினுக்கு அவருடைய கட்டுப்பாட்டில் இல்லாமல், அவரை அறியாமலேயே அவருக்கு ஏகப்பட்ட பழக்கங்கள் உருவாகியிருந்தன. ஆராய்ச்சியாளர்கள்தான் அவற்றை ஒவ்வொன்றாக தேடிப்பார்க்க வேண்டியிருந்தது. உதாரணமாக, யூஜினுடைய மகள் பெற்றோர்களைப் பார்க்க வீட்டுக்கு வருவாள். அப்பாவிடம் பேசிவிட்டு, சமையலறைக்குச் சென்று அம்மாவிடமும் பேசிவிட்டு, வாசலிலிருந்து சென்றுவருகிறேன் என்று கையாட்டிவிட்டு சென்றுவிடுவாள். யூஜினுக்கு மகள் தன்னிடம் பேசியது மறந்திருக்கும். அதனால், ஏன் மகள் தன்னிடம் பேசாமல் செல்கிறாள் என்று கோபப்படுவார். சில வினாடிகளில் ஏன் கோபப்படுகிறோம் என்பதே அவருக்கு மறந்துவிடும். ஆனால், கோபத்தின் வேகம் தணியாது. ஏன் கோபப்படுகிறோம் என்று அறியாமல், கோபம் மட்டும் நிலைத்திருந்து தானாகவே கோபம் தணிந்தாக வேண்டும் என்ற நிலையில் இருப்பார்.


 அவருடைய மனைவி பெவர்லி “ஏன் கோபமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், தெரியாது என்று கோபத்துடன் கூறுவார். நாற்காலியை உதைப்பது, மேஜையைக் குத்துவது என்று கோபமாக இருப்பார். அறைக்குள் வருபவர்களிடம், அந்த நேரத்தில் கோபமாகவே பேசுவார். ஆனால் கோபம் தணிந்தவுடன், அனைத்தையும் மறந்து நலம் விசாரிப்பார். “கோபம் வந்துவிட்டால், தானாகவே தீர்ந்தாக வேண்டியிருக்கிறது என்று நினைக்கிறேன்.” என்று பெவர்லி கூறினார்.

ஆனால் யூஜினுடைய பழக்கங்கள் மிகவும் பலவீனமாகக் கட்டமைக்கப் பட்டிருந்தன. அவருடைய துப்புக்களில் (தூண்டுதல்களில்) சிறிய மாற்றங்கள் இருந்தால்கூட அவரால் அந்த மாற்றங்களைச் சமாளித்து வழக்கமான செயல்களை செய்ய முடிவதில்லை. அவர் வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால்கூட போதும், அவரால் வீடு திரும்பமுடியாது. யாராவது அவரைப் பார்த்து அழைத்து வரவேண்டும். வாசலிலிருந்து வெளியே செல்லுமுன் அவரது மகள் அவரிடம் ஒரு நிமிடம் உரையாடினால் போதும், அவருக்கு கோபம் வரும் பழக்கம் மறைந்து விடும். 


யூஜினிடம், டாக்டர் ஸ்கொயர் செய்த சோதனைகள், மூளையின் செயல்பாடு குறித்து அறிவியல் உலகில் புதிய கருத்துக்களைத் தோற்றுவித்தது. நம்மை அறியாமலேயே, சிலவற்றைக் கற்று அதன் விளைவாக நம்முடைய அறிவின் துணையின்றி சில முடிவுகளை நாம் எடுப்போம் என்று தெரிந்தது. அறிவையும், காரணத்தையும் கொண்டு நாம் முடிவெடுப்பதுபோல பழக்கத்தின் காரணமாகவும் நம்முடைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று யூஜினிடம் மேற்கொண்ட சோதனைகளின் வாயிலாக தெரிகிறது. நம்முடைய அனுபவங்கள், பழக்கமாக உருவாகிறது என்று நமக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால், அந்த பழக்கங்கள் மூளையில் பதிந்துவிட்டால், நாம் எந்த மாதிரியான முடிவுகளை எடுப்போம் என்று நம்மை அறியாமலேயே அவை தீர்மானிக்கின்றன.  

யூஜினிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து, டாக்டர் ஸ்கொயர் பழக்கங்களைப்பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட்டார். ட்யூக், ஹார்வர்ட், ஏல் போன்ற பல்கலைக்கழங்களும், கூகுள், மைக்ரோசாஃப்ட், ப்ராக்டர் அன்ட் கேம்பல் போன்ற நிறுவனங்களும், பழக்கங்கள் உருவாவதற்கான நரம்பியல், உளவியல் காரணங்களை அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வம் காட்டின. பழக்கங்கள், அவைகளினால் எப்படி உருவாக்கப்படுகின்றன, எப்படி மாற்றப்படுகின்றன என்ற விஷயங்களில் அவர்களின் கவனம் திரும்பியது.

பழக்கங்களுக்கான துப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு டிவி விளம்பரமாகவோ, ஒரு குறிப்பிட்ட மனிதரின் சகவாசமாகவோ, எது வேண்டுமானாலும் இருக்காலாம். செயல்முறைகள் மிகவும் சுலமானதாகவோ, சிக்கலாகவோ இருக்கும் சாத்தியங்கள் உள்ளது. அதற்கு கிடைக்கும் வெகுமதிகள் உணவாகவோ, இன்பம் தருவதாகவோ, பெருமையை அளிப்பதாகவோ இருக்கலாம்.

ஏனைய ஆராய்ச்சியாளர்களும், யூஜினிடம் ஸ்கொயர் கண்டறிந்த முடிவுகளே தங்களுடைய ஆராய்ச்சியின் இறுதியில் எதிரொளிப்பதைக் கண்டனர். பழக்கங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதே சமயத்தில் பலவீனமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவை நம்மையறிமாலேயே உருவாகக்கூடும். நாம் வேண்டுமென்றே உருவாக்கவும் முடியும். நம் அனுமதியின்றி பலசமயங்களில் அவை உருவாகின்றன. ஆனால் அவற்றை நாம் வேண்டியவண்ணம் மாற்றியமைத்துக்கொள்ளமுடியும். நாம் நினைப்பதைக்காட்டிலும் நம் வாழ்வில் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. நமது மூளை அவற்றைப் பிடித்துக்கொண்டு, நமது இயல்பான சிந்தனைகளையும் மழுங்கவைத்து தங்களது எண்ணம்போல் நம்மை செயல்படவைக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடூட் ஆஃப் ஆல்கஹால் அனானிமஸ் – என்ற மது புழங்கிகள் பற்றிய ஆய்வு நிறுவனம் நடத்திய சோதனையில் எலிகளைப் பயன்படுத்தினர். எலிகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் உணவுகளை அளித்தனர். காலப்போக்கில் எலிகளுக்கு உணவைத்தேடி அந்த இடத்துக்கு செல்வது பழக்கமாகிவிட்டது. ஒரு பொத்தானை அழுத்தியவுடன் எலிகள் தானாகவே உணவைத் தேடி அந்த இடத்துக்கு சென்றுவிடும். எலிகள் செல்லும் வழியில் கம்பிகளை வைத்து, எலிகளின் உயிருக்கு பாதகமில்லாதவகையில் மின்சாரத்தைப் பாய்ச்சினர். எலிகள் மின்சாரத்தால் தாக்குண்டன. இருந்தபோதிலும் பழக்கத்தை மாற்றமுடியாமல், மின்சாரத்தால் தாக்குண்டாலும், அவை அந்தப்பாதையிலேயே உணவை நோக்கி செல்வது நிற்கவில்லை. எலிகளின் உயிருக்கு சேதமில்லாமல், உணவில் விஷத்தைக் கலந்தனர். எலிகள் மின்சாரத்தால் தாக்குண்டாலும், உணவில் விஷத்தால் பாதிப்படைந்தாலும் அவற்றால் தங்களது பழக்கத்தைக் கைவிடமுடியவில்லை. மூளையில் பதிந்திருந்த பழக்கத்தைவிட்டு அவற்றால் விலகமுடியவில்லை.

இதையே மனித வாழ்க்கைக்குப் பொறுத்திப்பார்த்தால், நமக்கும் அந்த சோதனை முடிவுக்கும் உள்ள ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. நன்கு களைத்த நேரத்தில், குழந்தைகளுடன் மெக்டொனால், KFC உள்ள வழியில் செல்கிறீர்கள். விலை மலிவு. ருசியோ அற்புதம். கொஞ்சம் உடல் நலனுக்குத் தீங்கு. ஒருமுறைதானே பரவாயில்லை என்று சாப்பிடச் செல்கிறோம்.

ஆனால், நம்முடைய முழு ஒத்துழைப்பு இல்லாமலேயே சிறுகச் சிறுக அந்தப் பழக்கம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது. ஆராய்ச்சிகள், குடும்பத்துடன் விரைவு உணவகத்தில் தொடர்ச்சியாக உண்ண விருப்பமில்லாததைக் காட்டுகிறது. ஆனால் நடைமுறை வாழ்வில், ஒரு மாதத்துக்கு ஒருமுறை என்று துவங்கி, பிறகு வாரம் ஒருமுறை என்றாகி, இறுதியில் வாரம் இருமுறை விரைவு உணவு என்ற ரீதியில் பழக்கமாகிவிடுகிறது. குழந்தைகள் உடல் நலனுக்கு தீங்காகும் அளவுக்கு பர்கருக்கு அடிமையாகிறார்கள். நார்த் டெக்ஸாஸ், மற்றும் ஏல் பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் ஏன் விரைவு உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள் என்று நடத்திய ஆராய்ச்சியில், மக்கள் தங்களை அறியாமலேயே ஒரு பழக்கத்தில் சிக்கிக்கொள்வதை அறிந்தார்கள். சில துப்புகளும், சில வெகுமதிகளும் மக்களுக்குக் கிடைத்தால் பழக்க வளையத்தில் அவர்கள் சிக்கிவிடுவதைக் கண்டறிந்தார்கள்.

மெக்டொனால் உணவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து மெக்டொனால் உணவகங்களும், ஒரே மாதிரியான வெளித்தோற்றம் மற்றும் உள்தோற்றத்தைக்கொண்டிருக்கும். பணியாளர்களும் ஒரே மாதிரி பேசும்படி பயிற்சியளிக்கப்பட்டிருப்பார்கள். அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியாக அமைந்து மனதுக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது. அனைத்து உணவுகளும் சுவையில் வேறுபாடின்றி நாக்கில் பட்டவுடன், சுவை நரம்புகளைத்தூண்டி, மூளைக்கு ஒரு பரவசத்தை அனுப்புமளவுக்கு உள்ளது. இவையனைத்தும் பழக்க வளையத்தை ஒரு வெகுமதியுடன் பூர்த்தி செய்ய ஏதுவாகிறது.

இருப்பினும் இந்த பழக்க வளையங்களும் மிகவும் பலவீனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் செல்லும் விரைவு உணவகம் மூடப்பட்டுவிட்டால், குடும்பம் வீட்டிலேயே உண்ணத்தொடங்கிவிடுவார்கள். அதற்காக வேறு இட்த்தைத் தேடிச்செல்வது பொதுவாக இருக்காது. சிறிய மாற்றங்கள் கூட இந்த பழக்க வளையத்தை உடைத்துவிடும். இந்தப் பழக்க வளையம் ஏற்படுவதை நாம் உணர்வதில்லை. இதனால் அவற்றின் தாக்கங்களையும், அவை எப்படி நம்மைக்கட்டுப்படுத்துகிறது என்பதையும் நாம் அறிந்துகொள்வதில்லை. கிடைக்கும் சிக்னலையும் வெகுமதியையும் நாம் புரிந்துகொண்டால், நாம் நமது தீய பழக்கங்களிலிருந்து விடுபடமுடியும். புதிய பழக்கங்களை ஏற்படுத்தவும் முடியும்.


-தொடரும்.




விலங்குகளைப்பற்றிய சில அதிசயமான உண்மைகள் :




Thursday, May 15, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 4



இங்கு என்ன நிகழ்கிறது என்று பார்க்க, T-  சோதனையில் எலியின் மூளையில் நிகழ்வதை ஒரு வரைபடமாகக் காண்போம். எலி “டிக்” ஒலி கேட்டவுடன், ஆரம்பத்தில் அதன் மூளை அதிகமாக வேலை செய்வது உணவின் அருகில் சென்றவுடன் மூளையின் செயல் குறைந்து விடுகிறது. உணவை அடைந்தவுடன் மீண்டும் மூளையின் செயல் அதிகமாவது வரைபடத்தில் தெரிகிறது.






அதாவது “டிக்” ஒலியைக் கேட்டவுடன், உணவைத் தேடப்போகிறோம் என்று உணர்ந்து எலியின் மூளை துரிதமாக செயல்படுகிறது. செல்லும் பாதை பழகிய பாதையா, புதிய பாதையா என்று தீர்மானிக்க விழைவதால் மூளையின் செயல்பாடு அதிகமாக தோன்றுகிறது. பழகிய பாதை என்று தெரிந்தவுடன் மூளை செயல்திறனை குறைத்துவிடுகிறது. உணவு கிடைத்தவுடன் அனைத்தும் சரியாக நடந்து விட்டது என்று உறுதி செய்ய விழைவதால் மீண்டும் அதன் செயல்திறன் அதிகரித்துக் காணப்படுகிறது.





மூளையின் மேற்கண்ட செயல்முறை மூன்று படிகளைக் கொண்ட சுழற்சியாக உள்ளது. முதலில் மூளைக்கு ஒரு துப்பு கிடைக்க வேண்டும்; ஏதாவது ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். இங்கு எலிக்கு “டிக்” என்ற ஒலி கிடைக்கிறது. இரண்டாவது ஏதாவது சில வழிமுறைகளைச் செய்ய வேண்டும். இந்த துப்பு மூளைக்குத் தன்னிச்சையானச் செயல்களைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று கூறுகிறது. மேலும் தன்னிச்சையாக எந்த செயலைச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. அந்த வழிமுறைகள் உடல்வழியாகவோ, உள்ளத்தின் வழியாகவோ, சிந்திப்பதன் வழியாகவோ இருக்கலாம். இறுதியாக அதற்காக ஒரு வெகுமதி கிடைக்க வேண்டும். அந்த வெகுமதியைக் கொண்டு மூளை இதனை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்வதற்கு தகுதியானதா இல்லையா என்று தீர்மானிக்கிறது. கீழே அந்த சுழற்சியைக் காணலாம்.



கால ஓட்டத்தில் – “துப்பு, வழிமுறை, வெகுமதி”, - “துப்பு, வழிமுறை, வெகுமதி” என்று தன்னிச்சையான பழக்கமாக உருவாகிவிடுகிறது. ஒரு கட்டத்தில் துப்பு கிடைத்தவுடன் தாங்கமுடியாத எதிர்பார்ப்பு மற்றும் ஏக்கத்தினையும் அளித்து வெகுமதி கிடைக்கும் வரை அந்த ஏக்கங்கள் தொடர்கின்றன. இறுதியில் நம்மை அறியாமலேயே நமக்கு பழக்கங்கள் தோன்றிவிடுகின்றன.


பழக்கங்கள் ஒருமுறை தோன்றிவிட்டால், மாற்றவே முடியாது என்று எண்ணிவிடாதீர்கள். வரும் அத்தியாயங்களில் அவை எப்படி மறக்கடிக்கப்படலாம், மாற்றப்படலாம் அல்லது அதற்குப் பதிலாக வேறு பழக்கங்களை உருவாக்குவது எப்படி என்றும் காணலாம். ஒரு பழக்கம் உருவானபிறகு மூளை தன்செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக்கொள்கிறது என்பதை நிரூபிக்கவே, பழக்கம் உருவான விதத்தைக் கண்டோம். எனவே ஒரு பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்றாலும் தீவிர முயற்சி செய்தே விடுபட்டாகவேண்டும். அந்த பழக்க சுழற்சிக்கு, மாற்றுப் பழக்கத்தின் சுழற்சியை உருவாக்கியே ஆகவேண்டும்.
பழக்க சுழற்சி, எந்த வகைகளான பாகங்களைக் கொண்டிருக்கிறது, அவை எப்படி வேலை செய்கின்றன என்று அறிந்து கொண்டால் பழக்கங்களைக் கட்டுபடுத்துவது எளிதான செயலாகும். பழக்கத்தை, சிறுசிறு பாகங்களாக பிரித்துவிட்டால், பிறகு அதனுடைய பாகங்களை கவனிப்பதன் மூலம் பழக்கத்தை மாற்ற இயலும்.


“நாங்கள் எலியை வைத்து T – சோதனை செய்தபொழுது நூற்றுக்கணக்கான முறை ஒரே இடத்தில் உணவை வைத்தோம். இறுதியில் “டிக்” ஒலியைக் கேட்டவுடன் உணவை நேரடியாக எடுத்துக்கொள்வது எலிக்குப் பழக்கமாயிற்று. நாங்கள் சில காலங்களுக்குப் பிறகு எலியின் உணவை வேறு இடங்களில் வைத்து எலியின் பழக்கத்தை மாற்றியமைத்தோம். பிறகு ஒரு நாள் மீண்டும் உணவை முதலில் வைத்த இடத்தில் வைக்க ஆரம்பித்தோம். என்னவாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? எலியின் பழைய பழக்கம் மீண்டும் வந்து விட்டது. பழக்கங்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதில்லை. அவை B.G  –ல் சேமித்துவைக்கப்படுகிறது. அது நமக்கு பல விஷயங்களில் நன்மை அளிக்கிறது. இல்லையேல், நீச்சலடிப்பதையும், காரோட்டுவதையும் நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள நேரிடும். 


பிரச்சனை என்னவென்றால், நல்ல பழக்கத்தையும், தீயப்பழக்கத்தையும் மூளைக்கு வேறுபடுத்தத் தெரியாது. எனவே தீயப்பழக்கத்திலிருந்து வெளிவந்தாலும், சரியான துப்புகளுக்காக அந்த பழக்கம் எப்பொழுதும் காத்திருக்கிறது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துவதோ அல்லது சாப்பிடும் பழக்கத்தை மாற்றுவதோ ஏன் கடினம் எனபது இதிலிருந்து புரிகிறது. உடற்பயிற்சி செய்வத்ற்குப் பதிலாக சோஃபாவில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டு சாப்பிட்டு இன்பமாக இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியபிறகு அதிலிருந்து வெளியே வருவது கடினமாகிறது. இதே காரணத்தினால், நம்மால் தீய பழக்கங்களை பின்னுக்குத் தள்ளி, புதிய நல்ல பழக்க சுழற்சியையும் ஏற்படுத்தவும் முடியும். இதைத்தான் லிஸா ஆலன், கைரோ பயணத்துக்குப் பிறகு செய்து சாதித்திருக்கிறார். புதிய செயல்முறைகளை உருவாக்கி பழகிவிட்டால், ஒருவரால் டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கத்தை விட்டொழித்து, உடற்பயிற்சியில் ஈடுபடுவது சாத்தியம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.


பழக்கங்களின் சுழற்சியை நினைவில் சேமிக்காமல், ஒவ்வொரு முறையும் நமது மூளை சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமானால், நம் நிலை எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். மூளை ஸ்தம்பித்துவிடும். B.G  – சேதமடைந்த நோயாளிகளால் எந்த விதமான செயல்களையும் செய்யமுடிவதில்லை. எடுத்துக்காட்டாக  B.G  - சேதமடைந்தவர்களால் ஒருவருடைய முகத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு, அவர் கோபமாக இருக்கிறாரா, மகிழ்ச்சியில் இருக்கிறாரா, எப்படி இருக்கிறார் என்று பிரித்தறிய இயல்வதில்லை.   – இல்லாமல் நம்மால் தினசரி செய்யும் எந்த வேலையையும் செய்ய இயலாது. காலையில் முதலில் பல் துலக்க வேண்டுமா அல்லது குளிக்க வேண்டுமா என்று நாம் யோசிப்பதில்லை.  B.G  – சேதமடைந்தால் பல் துலக்குவதுமுதல் பிரச்சனைதான்.பல் துலக்குவது, குளிப்பது போன்ற செயல்கள் மூளையின் துணையின்றி பழக்கங்களினால் நடக்கிறது.  B.G  – நலமாக உள்ளவரை நாம் சிந்திக்காமலேயே பல செயல்களை சரிவரச் செய்கிறோம்.


அதே வேளையில், மூளை பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதில் அபாயங்களும் உண்டு. பழக்கங்களில் நன்மை இருக்கும் அளவுக்கு தீமைகளும் உண்டு. யூஜினையே எடுத்துக்கொள்ளுங்கள். பழக்கங்கள் அவரது வாழ்க்கையை அவருக்கு ஓரளவுக்கேனும் திருப்பியளித்தன. அதே நேரத்தில் அவரிடமிருந்த முக்கியமான அனைத்தையும் பறித்துக்கொள்ளவும் செய்தன.


ஆராய்ச்சிகளுக்காக யூஜினிடம் அதிக நேரம் செலவழித்த பிறகு, ஞாபத்துறை நிபுணரான லாரி ஸ்கொயர், யூஜினால் புதிய பழக்கங்களை கற்றுக்கொள்ள முடிவதை உணர்ந்தார். யூஜினுடைய B.G  – அதிகமாக பாதிப்படையாமல் இருப்பதை அவர் ஸ்கேன் மூலம் கண்டறிந்தார். மூளை பெருமளவில் சேதமதைந்திருந்தாலும் யூஜினிடம் இன்னும் பழக்க சுழற்சிகளின் தாக்கம் உள்ளதா? நமது ஆதிகால நரம்பியல் செயல்பாட்டுமுறை எப்படி யூஜினுக்கு வழிகளைக் கண்டறிய உதவுகிறது?

யூஜினிடம் எப்படி பழக்கக்கங்களின் சுழற்சி உருவாகிறது என்று கண்டறிய ஸ்கொயர் ஒரு சோதனையைச் செய்தார். பதினாறு வேறுவேறு பொருட்களை எடுத்துக் கொண்டார். அவற்றை ஜோடி ஜோடியாகச் சேர்த்துவைத்தார். மொத்தம் எட்டு ஜோடி பொருட்கள். யூஜினிடம் எட்டு ஜோடிப்பொருட்களையும் காண்பித்துவிட்டு, பிறகு ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் ஒரு பொருளை எடுத்துக்கொண்டார். எடுத்து வைக்கப்பட்ட மற்ற எட்டுப்பொருட்களில் ஒன்றை யூஜினிடம் கொடுத்து சரியான ஜோடியைக் காட்டும்படி வேண்டினார்.

யூஜினிடம் இரண்டு பொருட்களைக் கொடுத்து அவற்றில் எந்தப் பொருள், காண்பிக்கப்படும் மூன்றாவது பொருளுக்கு சரியான ஜோடி என்று கேட்கப்படும். யூஜின் பதில் கூறிவிட்டு, அந்த பொருளை திருப்பிப் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின்புறம் சரி அல்லது தவறு என்று எழுதப்பட்டிருக்கும். மீண்டும் மீண்டும் காண்பித்த பொருட்களையே காண்பிப்பதால் சாதாரண நிலையில் உள்ளவர்கள் நான்கு, ஐந்து முறை கேட்டாலே சரியான பதிலைக் கூறிவிட முடியும். குரங்குகள் எட்டு முதல் பத்து நாட்களில் எட்டு பொருட்களின் ஜோடியையும் கண்டு பிடித்துவிடும். ஸ்கொயர் இந்த சோதனையை வாரம் இருமுறை யூஜினுக்கு அளித்தார். ஆனால் யூஜினினால் ஒரு முறைக்கூட சரியான ஜோடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு இந்த சோதனை தொடரப்பட்டது.


ஒவ்வொரு முறை சோதனையைத் துவங்கும்பொழுதும் இப்படித்தான் ஆரம்பமாகும்.
“நீங்கள் இன்று ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று தெரியுமா?” ஆராய்ச்சியாளர் யூஜினிடம் கேட்பார்.
“தெரியாது.”
“உங்களிடம் சில பொருட்கள் காண்பிக்கப்படும் அவை உங்களுக்கு ஏன் காண்பிக்கப்படுகிறது என்று தெரியுமா?”
“நான் அவற்றைப் பற்றி விளக்கிக் கூற வேண்டுமா அல்லது அவற்றின் பயனைப்பற்றிக் கூற வேண்டுமா?” யூஜினினால் அதற்கு முன்பு நிகழ்த்தப்பட்ட எந்த ஞாபகசக்தி சோதனையையும் நினைவில் நிறுத்த முடியவில்லை.


ஆனால் வாரங்கள் செல்லச்செல்ல யூஜினுடைய நினைவுகூறும் திறமையில் முன்னேற்றம் காணப்பட்டது. பதினான்கு வாரங்களுக்குப் பிறகு 85 சதவிகிதம் கேள்விகளுக்கு அவரால் சரியான ஜோடியை கண்டுபிடிக்க முடிந்தது. பதினெட்டு வாரங்களுக்குப் பிறகு 95 சதவிகிதம் சரியான ஜோடியை அவர் கண்டுபிடித்தார். ஒரு முறை சோதனை முடிந்த பிறகு யூஜின் ஆராய்ச்சியாளரிடம் வியப்புடன் கேட்டார் “எப்படி என்னால் சரியாக கூறமுடிகிறது?” யூஜினினால் அவரையே நம்ப முடியவில்லை.
“நீங்கள்தான் பதில் கூறவேண்டும். இந்த பொருளை முன்பே பார்த்திருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?”
“இல்லை. இங்குதான் எங்கோ இருக்கிறது.” தன் தலையை தொட்டுக் காட்டினார் யூஜின்.

எப்படி நினைவுகூற முடிகிறது என்று ஸ்கொயர் புரிந்துகொண்டார். யூஜினுக்கு ஒரு துப்பு கொடுக்கப்பட்டது. ஜோடிகள் மாற்றப்படாமல், மீண்டும் மீண்டும் யூஜினுக்குக் காண்பிக்கப்பட்டது. அது ஒரு நடைமுறை பழக்கத்தை உண்டாக்கியது. யூஜின் பதில் கூறியவுடன் அந்த பொருளை திருப்பிப்பார்க்கும் வழக்கம் அவரிடம் தன்னிச்சையாகவே ஒட்டிக்கொண்டது. அதில் “சரி” என்று எழுதப்பட்டிருந்தால் அது யூஜினுக்கு மிக்க மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்படுத்தியது. அதுவே அவருக்கு கிடைக்கும் வெகுமதி. ஆகமொத்தத்தில் யூஜினிடம் ஒரு பழக்க சுழற்சி ஒட்டிக்கொண்டது.




உண்மையில் யூஜின் பழக்கத்தினால்தான் நினைவு கூறுகிறார். அவரிடம் பழக்கம் ஒட்டிக்கொண்டது என்று நிரூபிக்க டாக்டர் ஸ்கொயர் இன்னும் ஒரு சோதனையை மேற்கொண்டார். யூஜினிடம், அவருக்கு நன்கு பரிச்சயமான பதினாறு ஜோடிகளை மொத்தமாக கொடுத்து, ஒவ்வொரு ஜோடியையும் தனித்தனியே எடுத்து வைக்குமாறு கூறினார். யூஜினுக்கு எங்கு ஆரம்பிப்பது என்று புரியவில்லை. “அடக்கடவுளே! இவ்வளவு பொருட்களை எப்படி நான் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்?” என்று யூஜின் கேள்வி எழுப்பினார். பிறகு ஒரு பொருளை எடுத்து அதன் மறுபக்கத்தை நோக்கினார். ஆராய்ச்சியாளர், யூஜினிடம் ஜோடி ஜோடியாக பொருட்களை எடுத்து வைக்குமாறுதான் கூறினார். அப்படி இருக்கும்பொழுது யூஜின் ஏன் பொருளின் மறுபக்கத்தை நோக்கினார்?
“எனக்கு அப்படியே பழகிவிட்டது என்று நினைக்கிறேன்.” யூஜின் கூறிக்கொண்டார்.
யூஜினினால் ஜோடிகளை சேர்த்துவைக்க முடியவில்லை. எப்பொழுதும் செய்யும்முறையிலிருந்து, கேள்வி மாற்றியமைக்கப்பட்டது யூஜினுக்கு குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டது. அவருக்கு எதுவும் பிடிபடவில்லை.


டாக்டர் ஸ்கொயருக்கு தேவையான நிரூபணம் கிடைத்துவிட்டது. எந்த செயலையும் சிலவினாடிகள் கூட நினைவில் நிறுத்த இயலாத யூஜின், புதிய பழக்கங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய திறமை பெற்றிருக்கிறார் என்பது இதிலிருந்து புலனாகிறது. தனியே வீட்டை விட்டு வெளியேறிய யூஜின் எப்படி வழிதெரிந்து வீட்டுக்குத் திரும்பினார் என்றும் புரிகிறது. அவருக்கு வீடு திரும்புவதற்காக சில மரங்கள், வழியில் இருந்த சில அடையாளங்கள், சில வீடுகள் துப்புகளாக இருந்திருக்கின்றன. அதனால் அவரால் அந்த பழக்கத்தைக் கொண்டு, எந்த வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று தெரியாவிட்டால்கூட, பழக்கம் காரணமாக சரியாக வீடு திரும்பியுள்ளார். மூளையிலுள்ள B.G,  கிடைக்கும் துப்புகளைக் கொண்டு பழக்கத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பசியில்லாவிட்டாலும்கூட, யூஜின் சரியான துப்புகள் கிடைத்தால், ஒரே நாளில் மூன்று, நான்கு தடவைகள் காலை உணவை உண்டுவிடுவார். அதற்கு காலைநேரத்தில் ஜன்னலில் இருந்து வெளிச்சம், ரேடியோவில் குறிப்பிட்ட விளம்பரம் போன்று அவருடைய B.G க்கு துப்புகள் கிடைத்தாலே போதும்



-தொடரும்.




பூனைக்கு நன்றி இல்லையா, யார் சொன்னது?

காணொளியில் பதிலைப் பாருங்கள்!


Thursday, May 8, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 3

M.I.T – ல் மூளை மற்றும் அறிவாற்றல் துறை பகுதிகளில் இருந்த ஆய்வகங்கள், ஒரு சாதாரண பார்வையாளருக்கு, குழந்தைகள் விளையாடும், ஒரு அறுவை சிகிச்சை பொம்மைகளைப்போல தோற்றமளிக்கும். சிறு கத்திகள், ரம்பங்கள், துளையிடும் இயந்திரங்கள் (ட்ரில்கள்), தானியங்கி இயந்திரங்களின் கைகளில் காணப்படும். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேஜையும் உண்டு. பார்த்தால் டாக்டர் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு செய்ததுபோன்று அசப்பில் காணப்படும். அறையின் வெப்ப நிலையும் பதினைந்து டிகிரி சென்டிகிரேடு நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். வெப்ப நிலையில் ஏற்படும் சிறு வேறுபாடும், அறுவை சிகிச்சை செய்யும், ஆராய்ச்சியாளர்களின் துல்லியத்தை மாற்றிவிடும் சாத்தியம் உள்ளது. ஆய்வகத்தில் மூளை நரம்பியல் விஞ்ஞானிகள், மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்ட எலியின் கபாலத்தைத் திறந்து, அதில் சிறுசிறு உணர்வுக்கருவிகளைப் பதிய வைத்திருந்தனர். அந்தக் கருவிகள் எலியின் மூளையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களையும்கூட பதிவு செய்யவல்லது. எலிகள் கண்விழித்தாலும், சிலந்திவலைகளைப்போல பின்னப்பட்டு அமைந்திருந்த ஒரு டஜனுக்கு மேற்பட்ட உணர்வுக்கருவிகளை அவற்றின் தலையில் இருப்பதை உணராமல் இருந்தன.

இந்த ஆய்வகங்கள் பழக்கங்கள் உருவாக்கம்பற்றிய அறிவியலில் ஒரு அமைதியான புரட்சியையே ஏற்படுத்திவிட்டன. யூஜின் மட்டுமல்லாது, நான், நீங்கள், மற்றும் அனைத்து மனிதகுலமும் ஒவ்வொருநாளையும் கடக்கத் தேவையான பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் என்று சோதனைமூலம் ஆராய்ச்சியாளர்கள் இங்கு நிரூபித்திருக்கிறார்கள். பல் துலக்குவது, காரை வீட்டிலிருந்து எடுப்பதுபோன்ற செயல்களை எப்படி பழக்கப்படுத்திக்கொண்டு செய்கிறோம் என்று, ஆய்வகங்களில் உள்ள எலிகளின் மீது செய்யப்பட்ட சோதனைகளைக்கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். டாக்டர் ஸ்கொயரைப் பொறுத்தவரை, யூஜினுக்கு புதிதாய் பழக்கங்கள் எப்படி ஏற்பட்டது என்று அறிந்துகொள்ள இந்த ஆய்வகங்கள் உதவியது.

1990-களில் யூஜினுக்கு காய்ச்சல் வந்த அந்தக் காலகட்டத்தில்தான்,  பழக்கங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வுகள் நடந்தன. அவர்கள் அடித்தள நரம்புசெல் தொகுதிகள் (basal ganglia) எனப்படும் நரம்புத்திசுக்களில் மிகுந்த ஆர்வம் காட்டினர். மனிதனுடைய மூளையை ஒரு வெங்காயம்போல நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது மண்டையோட்டின் அருகில் உள்ள அடுக்குகளே, பரிணாம வளர்ச்சியின்படி கடைசியில் உருவான அடுக்குகளாகும். நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கொண்டுவந்தாலோ அல்லது ஒரு நகைச்சுவையைக் கேட்டு சிரித்தாலோ நமது மூளையில் இறுதியாக உருவான வெளிப்புற அடுக்குகளே அந்த சமயத்தில் வேலை செய்கிறது. அங்குதான் மிகவும் சிக்கலான சிந்தனைகள் பிறக்கின்றன.


மூளையின் உட்பகுதியில், மூளையும் தண்டுவடமும் சந்திக்கும் இடத்தில்தான், மூளையின் பழமையான கட்டமைப்புகள் உள்ளன. நாம் தன்னிச்சையாக செய்யும் செயல்களான மூச்சுவிடுதல், விழுங்குதல், பயமுறுத்தப்பட்டால் மேற்கொள்ளும் செயல்கள் போலானவைகளை இந்தப் பழமையாக கட்டமைப்புகள் கவனித்துக்கொள்கின்றன. மண்டையோட்டின் சரியான மையப்பகுதியில், ஒரு கோல்ஃப் பந்து அளவிலான அடித்தள நரம்புத்தொகுதிகள் உள்ளன. Basal Gangliaஎன்றழைக்கப்படும், முட்டை வடிவிலான செல்களைக்கொண்ட இந்தப் பகுதியை வெகு நாட்களாக ஆராய்ச்சியாளர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பார்க்கின்ஸன் போன்ற மறதி நோய்களுக்கும், இந்த Basal Ganglia (B.G) – க்கும் தொடர்பு இருக்குமென்ற ஊகம் மட்டும் இருந்தது.


1990-களில் B.G- க்கும் பழக்கங்கள் உருவாவதற்கும் தொடர்புகள் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் ஊகித்தனர். B.G பகுதியில் காயமடைந்த விலங்குகள், எப்படி உணவுப்பெட்டிகளைத் திறப்பது, எப்படி உணவைக் குறுக்குவழிகளில் சென்றடைவது போன்ற காரியங்களை செய்ய முடியாமல் திணறின. ஆராய்ச்சியாளர்கள் புதிய, அணுவளவு சிறிய உணர்வுக்கருவிகளை, எலியின் மூளையில் பொறுத்தி, பழக்கங்களால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பரிசோதனை செய்ய முற்பட்டனர். ஆய்வகத்தில், சிறிய அளவிலான கைகளால் இயக்கக்கூடிய கைப்பிடிகளுடன் (joy stick) கூடிய உணர்வுக்கருவிகளை டஜன் கணக்கில் எலிகளின் மூளையில் பொறுத்தினர்.
பிறகு எலியை படத்தில் கண்டவாறு T - வடிவிலுள்ள ஒரு சிறிய விளையாடும் கருவிக்குள் வைத்தனர்.



எலி ஒரு தடுப்புக்கு பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டது. T – வ டிவத்தின் இடதுபுறம் சாக்லேட் இருந்தது. வலதுபுறம் வெறுமையாக இருந்தது. “டிக்” என்ற சத்தம் எழுப்பப்பட்டதும் தடுப்பு அகற்றப்பட்டது. சாக்லேட்டின் மணத்தை உணர்ந்த எலி அதனைத்தேடி T– வடிவத்துள் வந்து இடது அல்லது வலது புறத்துக்குச் சென்று உணவைக் கண்டுபிடித்து உண்டது. ஆரம்பச் சோதனைகளில் எலி உணவைத் தேடி எடுக்க நேரம் பிடித்தது. எலியை சாதாரணமாக அந்த சமயத்தில் பார்த்தபொழுது எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எந்தவித பதற்றமுமின்றி உணவைத் தேடுவதுபோல் காணப்பட்டது.

ஆனால், எலியின் தலையில் இருந்த உணர்வுக்கருவிகள் வேறொரு முடிவைக் காட்டின. எலியின் மூளை, முக்கியமாக B.G  மிகவும் அதிகமாக வேலை செய்தது. உணவைத்தேடி எலி எந்த செயல் செய்தாலும், நுகர்தல், சுவற்றைப் பிராண்டுதல், அங்கும் இங்கும் பார்த்தல் போன்ற செயல்களின்பொழுது B.Gல் ஏகப்பட்ட நிகழ்வுகள் உணரப்பட்டது. சாதாரணமாக எலி உலவிக்கொண்டிருப்பதுபோல காணப்பட்டாலும், அதனுடைய  B.G ஒவ்வொரு செயலையும், தகவல்களாக பகுப்பாய்ந்து கொண்டிருந்தது.  B.G ல் ஏகப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் நடப்பதை உணர்வுக்கருவிகள் காட்டின.

இதே சோதனை நூற்றுக்கணக்கான முறை எலிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சோதனையின்பொழுது தட்டுதடுமாறிக்கொண்டிருந்த எலிகள், நூற்றுக்கணக்கான முறைகளுக்குப்பிறகு “டிக்” ஒலியைக்கேட்டு தடுப்புக்கள் திறக்கப்பட்டவுடன், எந்தவிதமான தவறுகளும் இல்லாமல், நேராக உணவை நோக்கிச் சென்றன. ஆனால் அப்பொழுது B.Gல் ஆரம்பத்தில் நிகழந்த அதிகமான நிகழ்வுகள், மிகவும் குறைந்துவிட்டன. அதாவது எலிகள் சிந்திக்காமல் செயல்களைப்புரிய ஆரம்பித்துவிட்டது. தன்னிச்சையாக செயல்கள் நிகழும் அளவுக்கு மூளையின் தேவையற்று இருந்தது.


சோதனையின் ஆரம்பத்தில் எலிகளின் மூளைக்கு அதிக வேலை இருந்தது. அவற்றின் மூளை பரபரப்புடன் செயல்பட்டு, கிடைத்த அனைத்து துப்புகளையும் உபயோகித்து உணவை கண்டுபிடிக்க முயன்றது. ஆனால் எப்பொழுதும் இப்படித்தான் செல்லவேண்டும் என்று உணர்ந்து கொண்டதும், மூளை தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டது. நிறுத்திக்கொண்டது என்றும் கூறலாம். எங்கு செல்லவேண்டும் என்ற செயலை மூளை B.G –ல் சேமித்து வைத்தது உணவுக்கருவிகளின் மூலம் கண்டுணரப்பட்டது. உயிரினங்களின் ஆதிகால மூளையின் பகுதியான B.G  பழக்கங்களை சேமித்து வைக்கும் இடமான பிறகு, மூளை தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. தன்னிச்சையான இயக்கங்கள், மூளையின் சிந்திக்கும் செயலை வீணடிக்காமல் B.G –ல் சேமித்து வைக்கப்பட்டு செயல்களாக்கப்படுகின்றது.


நமது மூளை தொடர்ச்சியான மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய காரியங்களை, கொத்துக்கொத்தாக சேர்த்து பழக்கங்களை உருவாக்குகிறது. இத்தகைய தொகுதிகளையே நாம் அன்றாட வாழ்வில் நம்பியிருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் நாம் தினசரி செய்யக்கூடிய செயல்களான டூத்பிரஷை எடுப்பது, பேஸ்ட் வைப்பது, பல்துலக்குவது போன்ற காரியங்கள் இத்தகைய செயல்களே. சிந்திக்க தேவையில்லாமல் அவை B.G –ஆல் தன்னிச்சையாக நடக்கின்றன. அந்த கணங்களில் மூளையில் சிந்திக்கும் செயல்பாடுகள் நடைபெறாது.


சாதாரணமாக காரை ரிவர்ஸ் பார்க் பண்ணுவதை எடுத்துக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளும் ஆரம்ப காலக்கட்டங்களில் நம் முழு கவனத்தையும் அதில் செலுத்தி ஒவ்வொரு செயல்பாட்டையும் சிந்தித்து உறுதி செய்தபிறகே செயல் புரிகிறோம். காலம் செல்லச் செல்ல நம்மை அறியாமல் எதையேனும் யோசித்துகொண்டே நம்மால் ரிவர்ஸ் பார்க்கிங்கும் செய்துவிட முடிகிறது. அதாவது பழக்கம் ஒன்று உருவாகிவிட்டது. சைக்கிள் ஓட்டுவது, நடப்பது போன்று அனைத்துப் பழக்கங்களையும் ஆரம்பத்தில் அதிகம் மூளையை உபயோகித்தே செய்கிறோம். கால ஓட்டத்தில் மூளை இச்செயல்களுக்காக சிந்திப்பதில்லை.

கோடிக்கணக்கான மக்களும் மிகவும் சிரமமான காரியங்களையும் எளிதாக செய்ய முடிவதற்குக் காரணம் பழக்கங்களே. காலையில் காரில் சாவியை வைப்பதற்கு முன்பே B.G  - தன் வேலையைத் துவங்கிவிடுகிறது. பழக்கங்கள் ஒரு நிலைக்கு உறுதியான பிறகு, நமது மூளை அமைதியாகிவிடுகிறது. அதனால்தான் காரில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அலுவலகத்துக்கு இந்தப்பொருளை மறந்துவிட்டோம் போன்ற விஷயங்களை யோசிக்கும் அளவுக்கு அதில் இடமிருக்கிறது.



பழக்கங்கள் உருவாக முக்கியகாரணம், மூளை தன்னுடைய சக்தியை வீணடிக்க விரும்புவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தனது கட்டுப்பாடுக்குள் இருக்கும் பாகத்திடம், பழக்கமாக உருவாக்கிய செயல்களைக் கொடுத்துவிட்டு மூளை தன்னுடைய சக்தியை வீணடிக்காமல் இருக்க முனைகிறது. சக்தியைச் சேகரிக்கும் இந்தத் தன்மை ஒவ்வொரு உயிரினத்துக்கும் நன்மையளிக்கிறது. மிகவும் திறமைமிக்க மூளைக்கு அளவில் சிறிய இடம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தலையின் அளவும் சிறுத்துவிடுகிறது. தலையின் அளவு குறைவதால் பிரசவம் எளிதாகி, குழந்தைப் பிறப்பின்பொழுது தாய்,சேய் உயிர் பிழைக்கும் சாத்தியம் அதிகமாகிறது. திறமை வாய்ந்த மூளை, நடப்பது, நிற்பது, சாப்பிடுவது, கார் ஓட்டுவது போன்ற செயல்களுக்கு சக்தியை வீணடிக்காமல் எதிர்காலம்பற்றி சிந்திக்கவும் செய்கிறது. புதிய புதிய சாதனங்களையும், வழிகளையும் கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டுவது எளிதாகிறது. தன்னுடைய சக்தியை வளர்ச்சிக்கு உபயோகித்துக்கொள்கிறது.


பழக்கத்தை உருவாக்கி B.G  -இடம் கொடுத்துவிட்டு, மூளை அமைதியாக இருப்பதும் பிரச்சனையைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அமைதியாக இருக்கும்பொழுது, பழக்கத்தின் உதவியுடன் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று குறுக்கே ஒரு கார் வந்துவிட்டால் ஏடாகூடமாக ஆகிவிடாதா? அதனால், அதற்கும் B.G  - அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டு, எப்படிப்பட்ட சூழலில் செயல்கள் பழக்கங்களாக மாற வேண்டும் என்று தீர்மானிக்க சில வழிமுறைகளையும் கையாள்கிறது. ஒரு செயல் பழக்கமானால், அந்த செயலை ஆரம்பித்து ஏதோ ஒன்று நிகழ்வதை B.G    - குறித்து வைத்துக்கொள்கிறது.



-தொடரும்.



செய்தியும், காணொளிகளும்:

http://imgur.com/a/hgvUc